தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெருவளையம் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி அலமேலு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. அப்போது குடிபோதையில் இருந்த சங்கர் வீட்டில் மோட்டார் சைக்கிளில் ஊற்றுவதற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை மனைவியின் மீதும் தன் மீதும் ஊற்றிவிட்டு தீ வைத்துக் கொண்டுள்ளார்.
அதன்பின் வலி தாங்க முடியாத காரணத்தினால் கத்திக்கொண்டே வெளியில் வந்த சங்கரை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். பின்னர் தீக்காயம் ஏற்பட்ட கணவன்-மனைவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரின் மனைவி அலமேலு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.