ஜெயிலில் இருந்து வெளிவந்த சசிகலா கடந்த சில நாட்களாக தனது வாகனத்தில் அதிமுக கொடியை பறக்கவிட்டு பவனி வந்து கொண்டிருக்கிறார். மேலும் பொதுச் செயலாளர் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் திறந்து வைத்தார். இது அதிமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுடன் இணைந்து சசிகலா அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். இந்நிலையில் சசிகலாவின் இந்த இரண்டு நாள் பயணம் எடப்பாடியின் தரப்பினருக்கு சிறிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவினர் உணர்ச்சிவசப்பட்டு கூறும் வார்த்தைகளை வைத்து சசிகலா தனக்கு ஆதரவாக தொண்டர்களை சேர்த்துக் கொள்கிறார் என்று கருதப்படுகிறது. இதனை குறிப்பிட்ட எடப்பாடியின் நேர்காணல் வெளியான சில நிமிடங்களில், சசிகலா ஆதரவாளர்களால் கூவத்தூர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. எப்படியோ இரண்டு நாள் நிகழ்ச்சி போதுமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக நினைக்கும் சசிகலா தரப்பு, அடுத்த கட்ட வேலைகளில் இறங்கியுள்ளது.
அக்டோபர் 27 ஆம் தேதி தஞ்சையில் தினகரனின் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சசிகலா தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், பசும்பொன்னில் நடக்கும் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்வார் என்றும் ஏற்கனவே குறிப்பிடபட்டிருந்த நிலையில் அக்டோபர் 29 ஆம் தேதி குரு பூஜையில் பங்கேற்க சசிகலாவுக்கு அனுமதி கோரி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்ட மாஜிகளின் மௌனம் மற்றும் சசிகலாவின் தென் மாவட்ட சுற்றுப்பயணம் மறுபடியும் அதிமுகவிற்குள் புயலை ஏற்படுத்தும் என்று சசிகலா உறுதியாக நம்புகிறார்.