கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே தீர்வாக இருக்கிறது. தடுப்பூசி கண்டறிய படாமல் கொரோனா முதலாவது அலையில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதனால் சர்வதேச மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதற்கு தீவிரம் காட்டின. அதன்பின்னர் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு உபயோகத்துக்கு வந்தது.
தொடக்கத்தில் தடுப்பூசி பல இடங்களில் கிடைப்பதற்கு சவாலாக இருந்த நிலையில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 கோடிக்கு அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
அதனால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஏற்கனவே 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெறும் நிலையில், நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் 3 வது அலை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி துணிக்கடை, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் குவியும் கூட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. நவம்பரில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அந்த முடிவில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.