தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 91,139 சத்துணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 – 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பல தரப்பினர் சந்தேகமாக பார்க்கும்போது கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியாக நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார். இதையடுத்து தற்போது பள்ளிகள் அனைத்திலும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சத்துணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் நவம்பரில் தொடக்கப் பள்ளிகள் திறக்க உள்ளதால் சத்துணவு வழங்க தேவையான பொருட்களை சத்துணவு மைய பொறுப்பாளர்கள் நுகர்வோர் வாணிப கழகத்திலிருந்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேவையான பொருட்கள் மற்றும் முட்டை போன்றவை இருப்பில் வைத்திருக்க வேண்டும். சத்துணவில் சுண்டல் மற்றும் பாசிப்பயிறு வழங்கப்படுகிறது. தற்போது நுகர்வோர் வாணிப வளாகத்தில் தரமற்ற சுண்டல் மற்றும் பாசிப்பயிறு இருப்பதால் மறு அறிவிப்பு வரும் வரை அதை கொள்முதல் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 97,213 மாணவர்களுக்கு சத்துணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.