மேம்பாலம் கட்டும் பணி விரைவில் முடிவடைந்து, மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரி கூறியுள்ளார்.
கோவையிலிருந்து திருச்சிக்கு செல்லும் ரோட்டில் ரெயின்போ குடியிருப்பு முதல் பங்கு வர்த்தக கட்டிடம் வரை 3.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சிங்காநல்லூரிலிருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி உக்கடம் செல்லும் சாலையில் இறங்குவதற்காக இறங்குதளம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இறங்குதளத்திற்காக 9 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கோவில் மற்றும் சில வீடுகள் உள்ளதால் அவற்றை அகற்ற தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடங்கப்பட உள்ளதால் அங்குள்ள மக்களுக்கு உக்கடம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பின்னர் அங்கிருந்த வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடங்கியதால் அங்கு குடியிருந்தவர்கள் தங்களது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அதன்பின் அந்த வீடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த கோவிலை இடிப்பதற்காக மாரியம்மன் சிலை அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு வீடுகள் மற்றும் கோவிலை இடித்து அகற்றும் பணி தொடங்கியது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது, கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்திலிருந்து உக்கடம் பைபாஸ் சாலையில் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடத்தில் வீடுகள் இருப்பதால் 130 மீட்டர் தூரத்திற்கு இறங்கு தளம் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 32 வீடுகள் இடிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 20 வீடுகளை இடிப்பதற்குள் அங்குள்ளவர்களை பத்திரமாக ஒரு இடத்தில் தங்க வைத்துவிட்டு அந்த பணியை தொடங்க உள்ளனர். மேலும் இப்பணி விரைவில் முடிந்து டிசம்பர் மாதம் மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அவர் கூறினார்.