வாகனம் மோதி எழுத்தாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்பலபட்டு இடத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் குமரி மாவட்டத்தில் உள்ள காப்புக்காடு பகுதியில் இருக்கும் அரசு வாணிபக் கழக கிடங்கில் எழுத்தாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதன் காரணத்தினால் பாலகிருஷ்ணன் திருத்துவபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை டீ குடிப்பதற்காக வீட்டின் அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது திருத்துவபுரம் சந்திப்பில் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பாலகிருஷ்ணன் படுகாயமடைந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பாலகிருஷ்ணனை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.