2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார். இந்தச் சூழலில், ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கியை (Vlodimir Zelensky) ட்ரம்ப் வலியுறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.
அமெரிக்க சட்டப்படி, ஒரு அதிபர் சொந்தக் காரணங்களுக்காக வெளிநாட்டுத் தலைவர்களிடம் ஊழல் வழக்குகளை விசாரிக்குமாறு, உதவி கேட்டுள்ளது குற்றமாகும். அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து ட்ரம்ப்பின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் பதவி நீக்க விசாரணை (அதாவது அதிபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ட்ரம்ப் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்படும்) மேற்கொண்டுவருகின்றனர்.
இதுவரையில் ரகசியமாக நடைபெற்றுவந்த இந்த விசாரணை, அடுத்த வாரம் முதல் மக்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர். அதிபர் ட்ரம்ப் மீதான இந்தப் பதவி நீக்க விசாரணை, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் பலமாக எதிரொலிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.