தேமுதிக நிறுவனத்தின் தலைவர் விஜயகாந்தின் மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பூவராக சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர். இதனையடுத்து தேமுதிக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னதாக பிரேமலதா மற்றும் அவருடைய மகனை சந்தித்த தேமுதிக நிர்வாகிகள், பூவராகவரை தேடி வந்து குறையை கூறி விட்டாலே அது கண்டிப்பாக நிறைவேறும்.
பூவராகவரின் ஆசியுடன் கேப்டன் விஜயகாந்த் விரைவில் குணமடைவார் கவலையடைய வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதைக்கேட்ட பிரேமலதா விஜயகந்த் மற்றும் அவருடைய மகன் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜயகாந்த் மருத்துவ சிகிச்சையில் உள்ள நிலையில் நிர்வாகிகள் உறுதியாக இவ்வாறு கூறியிருப்பதை வைத்துப் பார்க்கும்பொழுது தேமுதிக அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராக உள்ளது என்று எதிர்பார்க்கபடுகிறது.