பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாஹிப்பையும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் கோயிலையும் இணைக்கும் வழித்தடம்தான் கர்தார்பூர் சாஹிப் வழித்தடம். இதன் வழியாக, இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப்புக்குச் சென்று அங்கு வழிபட முடியும்.சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குரு நானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த வழித்தடம் நவம்பர் 9ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
இன்னும் இரண்டு நாள்களில் கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்படவிருக்கிறது. இந்த வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திறந்துவைக்கிறார். இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்தார்பூர் வழித்தடத்திற்கு வரும் இந்தியர்கள் கடவுச்சீட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.