போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வேலை வாங்க முயன்ற தாய், மகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு பணியில் இருக்கும்போதே ராதாகிருஷ்ணன் இறந்துவிட்டார். இதனால் தனது மகள் வைஷ்ணவிக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் என ராதா கிருஷ்ணனின் மனைவியான வரலட்சுமி என்பவர் திருச்சி கோட்ட ரயில்வே அலுவலக சிறப்பு அதிகாரியிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது ஏற்கனவே அமுதா என்பவர் ராதாகிருஷ்ணனின் இறப்பினை தெரிவித்து தனது மகனான சதீஷ்குமாருக்கு வேலை வாங்கித் தருமாறு விண்ணப்பித்துள்ளதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அமுதாவை ராதாகிருஷ்ணன் 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும், அதற்கான சான்றிதழ் போன்றவற்றை அவர்கள் அதிகாரியிடம் சமர்ப்பித்துள்ளனர். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த வரலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அமுதாவுக்கு கணேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது எனவும், இந்த தம்பதியினரின் 3-வது மகன் சதீஷ்குமார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அமுதாவும், சதீஷ்குமார் அதிகாரியிடம் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானது என்பது நிரூபிக்கப்பட்டது. எனவே போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வேலை வாங்க முயன்ற தாய், மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.