ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய தொடர்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வாஜ்பாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் ஒருநாள் போட்டிகளைப் பார்ப்பதற்காக ஆப்கானின் காபூல் நகரைச் சேர்ந்த சேர் கான் என்ற ரசிகர் ஒருவர் லக்னோ நகருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்திருந்தார். அவர் அங்கு தங்குவதற்காக விடுதி அறையைத் தேடியுள்ளார்.
அந்த ரசிகர் எட்டு அடி இரண்டு அங்குலம் என்பதால் அவருக்கு ஏற்ற அறை கிடைக்காமல் அவர் நகர் முழுவதிலும் சுற்றித்திரிந்துள்ளார்.பின்னர் சேர் கான் காவல் துறையின் உதவியை நாடினார். இதையடுத்து நாகா பகுதியில் காவல் துறையினர் தனியார் விடுதியில் சேர் கானுக்கு அறை எடுத்துத் தந்துள்ளனர். இந்த ரசிகர் குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அவரைக் காண்பதற்காக விடுதியின் முன்பாக திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டதால் ஆப்கன் ரசிகரை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானத்துக்கும் காவல் துறையினரே தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
நேற்றையப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆப்கானிஸ்தான் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது.இந்த ஆப்கன் ரசிகரின் தோற்றம் பார்ப்பதற்கு தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனின் வேடத்தை ஒத்திருந்தது. தசாவதாரம் படத்தில் ஹலிஃபுல்லா கான் முக்தர் என்ற வேடத்தில் கமல் உயர்ந்த மனிதராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.