தமிழகத்தில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கும் நேரம் பற்றி இன்று ஆலோசனை நடத்தப்படுவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து ஆற்றுநீர் மாசடைவதாக சென்னை ஐஐடி குழு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பூர், கரூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய மற்றும் சலவை தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் காவிரி மற்றும் அதன் உபநதிகளில் வெளியேற்றப் படுகிறது என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர்கள் அடங்கிய 5 குழுக்கள் அமைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுக்கள் நீர்நிலைகளில் சோதனை செய்து நீர் மாதிரிகளை சேமித்து அறிக்கையளித்துள்ளது. அந்த அறிக்கை விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தீபாவளிப் பண்டிகை வரவிருப்பதால் பட்டாசு தயாரிப்பு பற்றி தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவற்றில் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள நெறிமுறைகளை பின்பற்றி பட்டாசு வெடிப்பதற்கான நேரம் நிர்ணயம் செய்வது பற்றியும், குறும்படம் மூலம் பொது மக்களுக்கு பட்டாசு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாகவும், முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் 22ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.