கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் தென்மலை அணை திறக்கப்பட்டு அதில் பொதுமக்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றது. மேலும் அணைகளும் அதன் கொள்ளளவு எட்டியுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இடுக்கி, இடமலையார், பம்பா மற்றும் காக்கி உட்பட மாநிலத்தின் மொத்தம் 78 அணைகளில் இருந்து அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோன்று கேரளாவின் இடுக்கி நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியான செருதோணி அணை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திறக்கப்பட்டது.
இதனையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள இடமலையார் அணை மற்றும் பத்தனம்திட்டாவின் பம்பா அணை வாயில்களும் இன்று காலை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அணைகளின் வாயில்கள் திறக்கப்படும் போது யாரும் மீன்பிடிக்க ஆறுகளில் குதிக்க வேண்டாம் என்று மாநில காவல்துறை எச்சரித்துள்ளது. ஆனால் தென்மலை அணையில் இளைஞர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து மீன் பிடித்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Extreme Fishing in Kerala.
With the opening of dam shutter due to heavy rain and floods the fish are flowing down stream…. Party time… pic.twitter.com/69pH5h866i— Reiju Alex (@reijualex) October 19, 2021
கேரளாவில் கடந்த 3 நாட்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 30-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் எவ்வித பாதுகாப்பும் இன்றி பொதுமக்கள் ஆற்றில் குதித்து “டேம் மீனை” பிடித்து அதை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு பிடிக்கப்படும் மீன் 15 முதல் 20 கிலோ வரை எடை இருக்கும். சுவை மிகுந்த அந்த ஒரு மீனின் ஆரம்ப விலை 2 ஆயிரம் ரூபாய் என தெரிகிறது. இவ்வாறு பொதுமக்களின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்துள்ள அம்மாநில காவல்துறை அணைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் உடனே அது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது.