ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், தற்போது உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இதனிடையே பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
அப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 80 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இதனிடையே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான சோயப் அக்தர், சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் ஸ்டீவ் ஸ்மித் குறித்து கருத்து தெரிவித்துள்ளர்.
அந்த வீடியோவில் அவர், ‘ஸ்மித்திற்கு எந்தவொரு தனி ஸ்டைலும் நுட்பமும் இல்லை. ஆனால், சிறப்பாக விளையாடுகிறார். நான் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரும் விளையாடியிருந்தால், நிச்சயம் எனது பந்துவீச்சில் அவர் காயமடைந்திருப்பார்’ என்றார். பாகிஸ்தான் அணியின் அதிவேகப் பந்துவீச்சாளராக திகழ்ந்த சோயப் அக்தர், உலகின் பல தலைசிறந்த பேட்ஸ்மேன்களையும் தனது அசாதாரண பந்துவீச்சால் திணறடித்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.