தமிழகத்தில் பண்டிகை நாட்களில் பொருட்களை வாங்கிச் செல்லும் போது பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதால் இன்னும் ஓராண்டிற்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பணிபுரியம் தூய்மை பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். இதில் அண்ணாநகர் எம்எல்ஏ எம்.கே.மோகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், கொரோனா பரவலை கட்டுபடுத்த தடுப்பூசி ஒன்றே ஆயுதம். அதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்.
அதனை தொடர்ந்து 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து தேசிய நிபுணர் குழு அனுமதி அளித்தவுடன் தமிழகத்தில் உடனடியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இதையடுத்து நம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி நிர்வாக பின்பற்ற வேண்டும். மேலும் பண்டிகைக் காலங்களில் மக்கள் பொருட்கள் வாங்கச் செல்லும்போது கூட்டமாக கூடும் இடங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.