ஆவின் நிறுவன அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள கொட்டப்பட்டு பகுதியில் ஆவின் பால் பண்ணை அமைந்துள்ளது. இங்கிருந்து பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு என்ஜினீயரிங் பிரிவில் ஹரிராம் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் 2-வது மகன் ஆவார். கடந்த வாரம் ஆவின் பால் பண்ணையில் இருக்கும் 5 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்த பயன்படுத்தும் 1 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள பாய்லர் பழுதாகிவிட்டது.
இதனால் அந்த பாய்லரை பழுது நீக்கும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஹரிராம் பணியை முடிக்காமல் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து சென்றுள்ளார். எனவே பணியின்போது அலட்சியமாக இருந்ததாக ஹரிராம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி பணிசெய்ய தவறியதாக கூறி ஹரிராமை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.