காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் புலிவந்தி கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 20 நாட்களாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உப்பு நீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று சுகாதாரமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். அதன் பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.