தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையடுத்து தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளுவர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதனைப்போலவே அக்டோபர் 24 ஆம் தேதியன்று அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வருகின்ற அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதன்முதல் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆனால் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமான வெப்பநிலை 35 டிகிரி மற்றும் குறைந்த பட்சமான வெப்பநிலை 25 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.மேலும் வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளி மண்டலத்தின் கீழ் அடுக்கில் அக்டோபர் 26 முதல் வட கிழக்குக் காற்று வீசக்கூடும். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் எதிர் வரும் என்று தெரிவித்துள்ளது.