கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் எடுப்பது கடினமான செயலாகும். இருப்பினும், இந்தக் கடினமான செயலை தங்களது சிறப்பான சுழற்பந்துவீச்சினால் இங்கிலாந்தின் ஜிம் லெக்கர், இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோர் எளிதாக்கினர்.
இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஜிம் லேக்கர் 1956இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை சாய்த்து மிரட்டினார். அதன்பின், 1999இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜம்போ என ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து, 19 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மணிப்பூரைச் சேர்ந்த இடதுகை பந்துவீச்சாளர் ரெக்ஸ் சிங் கூச் பிகார் (Cooch Behar) தொடரில் 10 விக்கெட்களை வீழ்த்தி மிரட்டினார். தற்போது அவர்களது வரிசையில் மேகாலயாவைச் சேர்ந்த 15 வயது இளம் ஆஃப் ஸ்பின்னர் நிர்தேஷ் பய்சோயா இணைந்துள்ளார். மீரட்டில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது 16 வயதுக்குள்பட்டோருக்கான விஜய் மெர்சன்ட் உள்ளூர் தொடரில் விளையாடிவருகிறார்.
இதில், நாகாலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் இவர் தனது சிறப்பான பந்துவீச்சினால் நாகாலாந்து அணியின் அனைத்து விக்கெட்களையும் தனி ஒருவராக சாய்த்தார். 21 ஓவர்கள் பந்துவீசிய இவர், 51 ரன்களை மட்டுமே வழங்கி 10 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். தற்போது இவரது பவுலிங் திறன் நெட்டிசன்களின் புருவத்தை உயரச்செய்துள்ளது.