பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் சடலம் கால்வாயில் மிதந்தது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் சரகத்திற்கு உட்பட்ட தாழக்குடியில் இருந்து சந்தைவிளைக்கு செல்லும் சாலையோரம் நாஞ்சில் புத்தனாறு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே இருந்த பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்கேற்ப அதன் அருகில் குழாய்கள் அமைத்து தற்காலிக பாலம் போடப்பட்டுள்ளது. எனவே தற்போது அதன் வழியாகத்தான் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் தற்காலிக பாலம் அருகே கால்வாய் ஓரத்தில் தண்ணீரில் ஒரு பச்சிளம் குழந்தையின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதனையடுத்து குழந்தையின் சடலத்தை காவல்துறையினர் கால்வாயில் இருந்து வெளியே மீட்டெடுத்தனர். அப்போது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் பச்சிளம் குழந்தையின் சடலம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கால்வாயில் வீசி சென்றவர்கள் யார்…? தகாத உறவில் பிறந்திருக்குமோ…? என்ன காரணமாக இருக்கும் என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் தற்போது குழந்தை பெற்றவர்களின் விவரம் குறித்து காவல்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.