சாராயம் காய்ச்சுவதற்காக சர்க்கரை கடத்திய ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம்-பூட்டை செல்லும் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் உர மூட்டைகளுக்கு இடையை 120 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக சர்க்கரை மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் முருகன் என்பதும், சாராயம் காய்ச்சுவதற்காக சர்க்கரையை கடத்திச் சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முருகனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த சாராயம், 2250 கிலோ எடையுடைய சர்க்கரை மூட்டைகள் மற்றும் வாகனங்கள் என அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சர்க்கரை கடத்தல் தொடர்பாக மாயவன், அஜித் ஆகியோர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.