மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,ரியல் எஸ்டேட் துறையினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க சிறப்பு சாளரம் அமைக்கப்பட்டு, 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம் நிதிப்பற்றாக்குறையால் கட்டி முடிக்கப்படாத கட்டடங்களை கட்டி முடிக்கலாம். இதனால் 1,600 கட்டுமானத் திட்டங்கள் புத்துயிர் பெறும் என்றார்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் நான்கரை லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். மும்பையில் இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்படும். சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் ஒன்றரை கோடிக்கு உட்பட்ட வீடுகளை கட்டி முடிக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.தொடர்ந்து செய்தியாளர்கள் மற்ற மெட்ரோ நகரங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இதர மெட்ரோ நகரங்களில் ஒருகோடிக்கு உட்பட்ட வீடுகள் கட்டி முடிக்க நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.