Categories
மாநில செய்திகள்

உண்மையாகவே….. ‘திருவள்ளுவர் யாருக்குத்தான் சொந்தம்?’…. விரிவான விளக்கம் …!!

உலகம் போற்றும் ஒரு புலவரை அனைவருக்கும் பொதுவானவர் என இச்சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டு வந்த காலங்களில் துறவிகள், புலவர்கள் என அனைவரும் அனைவருக்கும் சொந்தம் என்ற நோக்கில் பெரும்பாலும் வெள்ளை உடைகளையே புகைப்படங்களில் வரைந்தோ, பொறித்தோ வைப்பார்கள். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உலகம் போற்றும் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரை, காவி உடையில் இருப்பதுபோன்ற புகைப்படத்தை பதிவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு விஷமிகள் அவமரியாதை செய்தும், இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் திருவள்ளுவர் சிலைக்கு அதே காவி உடை அணிவித்த செயலும் என தமிழ்நாடு முழுவதும் பரபரப்புக் கிளம்பியது. தமிழ்நாட்டில் மதச்சாயத்தில் திருவள்ளுவரைக் கலப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சாயம் பூசும் முயற்சி இப்போது தொடங்கியது அல்ல… எப்போதோ தொடங்கிவிட்டது. தமிழ்நாடு துறவிகளில் காவி வண்ணம் பூசி புகைப்படம் இருக்கும் ஒரே துறவி, சாக்கிய நாயனார் மட்டுமே. ஏனென்றால் அவர் புத்த சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறியதால், அவரை காவி உடையில் தமிழ்ச் சமூகம் அடையாளப்படுத்தியது.

திருவள்ளுவர் உருவம் காலம் காலமாக எப்படி எல்லாம் மாறி வந்துள்ளது என்பது குறித்துப் பார்ப்போம்.

திருவள்ளுவரின் திருக்குறள் பற்றி பலரும் உரைகள் எழுதி வெளியாகியுள்ளன. அதில் முக்கியமானவர்கள் கே.பாலசுப்ரமணியம், மோகன். இவர்கள் இருவரும் எழுதி வெளியான ‘திருக்குறள் ஸ்வரபஸ்துதி’ என்ற புத்தகத்தில் திருவள்ளுவர் இப்படித் தான் இருந்திருப்பார் என்ற கண்ணோட்டத்தில் உருவாக்கப்பட்ட புகைப்படம் முதன்முதலாக இடம்பெற்றது.

அதையடுத்து நாம் தற்போது பரவலாக பார்க்கும் வெள்ளை உடையுடன் இருக்கும் திருவள்ளுவரை வேணுகோபால் ஷர்மா என்பவர் உருவாக்கியிருக்கிறார். எந்த மத அடையாளமும் இல்லாமல் அவர் உருவாக்கிய படத்தைத் தான் முதன்முதலாக திருவள்ளுவருக்கு வெளியிடப்பட்ட தபால் தலையில் பயன்படுத்தினர். அதனை மத்திய அமைச்சர் சுப்புராயன் வெளியிட்டதாக திராவிட இயக்கத்தின் வரலாற்றாசிரியர் திருநாவுக்கரசு தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனால், அந்த படத்தில் ஏன் பூணூல் இல்லை என அப்போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சர் சுப்புராயன் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அந்த விளக்கம் என்னவென்றால், பூணூல் வெள்ளை உடையால் மறைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது இந்த படத்தில் பூணூல் வரையப்படாமல் இருக்க வேண்டும் என்றார்.

ஆனால், திருவள்ளுவரின் படம் பல்வேறு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. மத அடையாளம் பொருந்திய ஒரு படம் திருவள்ளுவருக்கு நிச்சயம் கொள்கைக்கு எதிராக இருக்கும் என பாவேந்தர் பாரதிதாசன் உட்பட பல்வேறு தரப்பினரும் புதிய படத்தை உருவாக்கவேண்டும் என ஆலோசனைக் கூறினர். அதையடுத்து சைவ சித்தாந்த நூல்பதிப்புக் கழகம் சார்பாக புதிய படம் வெளியானது.

வேணுகோபால் ஷர்மா படத்திற்கு முன்னதாக, ‘கலை’ என்ற வார இதழை நடத்தி வந்த பாலு சகோதரர்கள் திருவள்ளுவரின் இரு படங்களை வரைந்து வெளியிட்டனர். அந்த படத்தில் எவ்வித மத அடையாளமும் இல்லாமல் இருந்தார், திருவள்ளுவர். பின்னர் அந்த இரு புகைப்படங்கள் தான் அறிவாலயத்திலும், திமுக கூட்டங்களிலும் இடம்பெற்றிருந்ததாக திருநாவுக்கரசு கூறுகிறார்.

வேணுகோபால் வரைந்த படத்தை வைத்து சட்டப்பேரவையில் விவாதங்களும் நடந்தன.

சாதி, மத, மொழி, இனம் எந்தவித அடையாளங்களிலும் இல்லாத ஒரே மனிதர் திருவள்ளுவர்:

இப்போது திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும் ஒரு பேச்சு உள்ளது. ஆனால், இது காலம் காலமாக பல்வேறு மதத்தினரும், சாதியினரும் திருவள்ளுவருக்குச் சொந்தம் கொண்டாடிக்கொண்டு தான் இருக்கின்றனர் என்பதற்கு ஒரு நிகழ்கால சான்று. அவ்வளவே.

திருவள்ளுவர் எந்த மொழி, மதம் என யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. திருவள்ளுவர் பற்றி மு.வ. ஒருமுறை பேசுகையில், ‘திருவள்ளுவர் பற்றிப் பல நிகழ்வுகள் நடக்கிறது. ஆனால், இலக்கியத்தின் மூலம் அறிந்துகொள்ளப்பட்ட வரவுகளில், அவர் யார் என்ற எந்த நம்பகத்தன்மையும் இல்லை’ என்றே கூறுகிறார்.

Image result for திருவள்ளுவர்

பிறப்பு, மதம், சாதி, இடம், மொழி என எந்த வித அடையாளங்களையும் அவர் வெளிப்படுத்தவில்லை. அதேபோல் சடங்குகள் பற்றியோ மதக்கொள்கைகள் பற்றியோ அவர் திருக்குறளில் குறிப்பிடவில்லை. இவர் சங்க காலத்தைச் சார்ந்தவர் எனவும், திருக்குறள் கி.மு. 450-550 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இவரது திருக்குறளை வெளியிட்ட பதிப்பகம் ஒன்று திருவள்ளுவரை, கிறிஸ்து பிறப்பதற்கு முன் 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று குறிப்பிடுகிறது. மேலும் அந்த பதிப்பகம், ‘அவருடைய தந்தை பெயர் பகவான், பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், தாய் ஆதி. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்’ எனவும் கூறியுள்ளது. சிலர் ஏதாவது ஒரு மதத்தை நிச்சயம் திருவள்ளுவர் பின்பற்றியிருப்பார் என வாதிடுகின்றனர்.

ஆனால், உலகம் போற்றும் ஒரு புலவரை அனைவருக்கும் பொதுவானவர் எனப் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் திருவள்ளுவரின் அடையாளத்தை தேடுவதை விட்டுவிட்டு, அவர் இயற்றிய திருக்குறளை அறிந்துகொள்ள முனைய வேண்டும் என பலரும் கூறுகின்றனர்.

Categories

Tech |