நியூசிலாந்தில் நிலநடுக்கத்திலும் பிரதமர் தொடர்ந்து பேட்டியளித்தது பத்திரிகையாளர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளது.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு நேரலை ஒளிபரப்பில் பேட்டியளித்தார். இந்த சந்திப்பில் பிரதமர் ஜெசிந்தா, கொரோனா பரவலின் பாதிப்பு நிலவரம் மற்றும் 90 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அரசின் இலக்கு குறித்து விளக்கமளித்தார். அந்த சமயம் நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்த கட்டிடம் பயங்கரமாக குலுங்கியது.
அப்போது மேடையில் பேசிய பிரதமர் ஜெசிந்தா சற்று நிலைதடுமாறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையிலும், பிரதமர் தன் பேச்சை நிறுத்தாமல் புன்னகை முகத்துடன் பத்திரிகை நிபுணர்களை நோக்கி “மன்னிக்கவும் சிறிய கவனச்சிதறல். உங்கள் கேள்வியை மீண்டும் கேட்கிறீர்களா” என்று கேட்டுள்ளார்.
இதனால் பத்திரிகையாளர்களும் பதற்றத்தை மறந்து கேள்வியை தொடங்கினர். இதன்பின் எந்தவித இடையூறும் இன்றி பேட்டி நடந்து முடிந்தது.
இதற்கு முன்னதாக நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் வெலிங்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்கள் பயங்கரமாக குலுங்கியதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஏந்த தகவல்களும் வெளிவரவில்லை.