மண்சரிவினால் சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பாதையின் வழியாக கர்நாடக மாநிலம் மைசூரு செல்லும் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு எப்போதும் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இந்நிலையில் பர்கூரில் பெய்த மழையினால் மலைப்பாதையின் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் ராட்சத பாறைகள் உருண்டு நடு ரோட்டிற்கு வந்தது. அதுமட்டுமின்றி பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதன் காரணமாக மைசூரில் இருந்து அந்தியூர் நோக்கி வந்த வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ ., தாசில்தார் விஜயகுமார், வனச்சரகர் உத்தரசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். அதாவது சாலையில் விழுந்த ராட்சத பாறைகள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது. அதன்பின் சாலையில் கிடந்த மரங்கள் வெட்டி ரோட்டு ஓரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் அகற்ற முடியாத அளவில் இருந்த ராட்சத பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இந்தப் பணியானது மதியம் 12 மணி வரை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் கார் மாற்று இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வர முடிந்தது.
அதன்பின் மலைப்பாதையை சீரமைக்கும் பணிகள் மாலை வேளை வரை நீடித்ததால் அங்கு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இவ்வாறு மண்சரிவு ஏற்பட்ட நேரத்தில் வாகனங்கள் ஒன்றும் அந்த இடத்தில் போகாததால் பெரும் விபத்தானது தவிர்க்கப்பட்டது. இதற்கிடையில் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அந்தியூரில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த வேளையில் தற்போது மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதினால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தது. இதனால் அந்த கிராமங்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. எனவே மின்வாரிய அதிகாரிகள் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.