தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக அவசரகால மேலாண்மைத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அவசரகால மேலாண்மைத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து 270 கிலோ மீட்டர் தூரத்தில் ரியாஸன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள எலாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறிப்பாக வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் 170 அவசர பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் 50 வாகனங்கள் தீயை அணைக்கும் பணிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெடிமருந்து தயாரிப்பின் போது ஏற்பட்ட கோளாறு காரணமாக தான் விபத்து ஏற்பட்டுள்ளது” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு முன்னதாக வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காணாமல்போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் காணாமல்போனவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.