குழந்தையை கடத்திய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் சாலையோரம் குடிசை அமைத்து ஆனந்த்-நாகம்மாள் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு முகம்மது சுலைமான் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளான். அந்த குழந்தை திடீரென மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர், பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சில மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு அந்த மர்ம நபர்களை கைது செய்வதற்காக தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர் காவல்துறையினர் நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை உட்பட பல்வேறு இடங்களில் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தையை கடத்தி சென்றது ஆறுமுகம் மற்றும் மிக்கேல் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் அந்த குழந்தையுடன் தாராசுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து ஆறுமுகம் மற்றும் மிக்கேல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். அதன்பின் மீட்கப்பட்ட குழந்தையை காவல்துறையினர் ஆனந்த்-நாகம்மாள் தம்பதியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.