பெண்களிடம் கடன் தருவதாக கூறி 1.44 கோடி மோசடி செய்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டி, சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், சேரன்மகாதேவி பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவர் நிதி நிறுவனம் தொடங்கி குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி பெண்கள் பலரிடம் முன் பணம் வாங்கினார். ஆனால் அவர் சொன்னது போல் கடன் தராமல் ஏமாற்றி விட்டார் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் இந்த மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி பொதுமக்கள் பலரிடம் முன் பணமாக சுமார் 1.44 கோடி மோசடி செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.