Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஜெயலலிதாவின் கார் டிரைவர் விபத்து வழக்கு” அங்கு போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு…. டி.ஐ.ஜி. தலைமையில் தீவிர விசாரணை….!!

ஜெயலலிதா அம்மாவின் கார் டிரைவர் விபத்து தொடர்பாக டி.ஐ.ஜி. தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவிற்கு சொந்தமாக தேயிலை எஸ்டேட் இருக்கிறது. கடந்த 2017-ஆம் வருடம் ஏப்ரல் 24-ம் தேதி அங்கு வேலையில் இருந்த காவலாளி ஓம் பகதூர் என்பவரை ஒரு கும்பல் கொலை செய்தனர். மேலும் அந்த கும்பல் எஸ்டேட்டில் நுழைந்து அங்கு இருந்த ஆவணங்கள் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் வசித்து வந்த ஜெயலலிதா அம்மாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் உட்பட பல பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து சந்திரகிரி எனும் இடத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் கார் டிரைவரான கனகராஜ் உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து அப்போதைய ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில் கார் டிரைவர் கனகராஜ் இறப்பில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இதற்கிடையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை பிடிக்க கோவை மண்டல ஐ.ஜி. சுதாகரன், சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் போன்றோர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர்.

இதில் கார் டிரைவர் கனகராஜின் உறவினர் ரமேஷ் என்பவர் ஆத்தூர் அருகில் உள்ள சக்தி நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் விபத்தில் இறந்த கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் ரமேஷ் அவரது குடும்பத்தினர் ஆகியோரிடம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரமேஷ் குடும்பத்தினர் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் கூறியபோது “கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கு குறித்து டி.ஐ.ஜி. மகேஸ்வரி தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஆகவே கனகராஜ் இறப்பில் உள்ள மர்மங்களை வெளியே கொண்டுவர விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணை முடிவில் கனகராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா அல்லது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |