கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்தை திருடி அதிலிருந்து டீசலை ஆட்டையைப் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிபவர் ஹனுமந்த ராயா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.40 மணிக்கு அரசு பேருந்தை குப்பி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் விடுதியில் உறங்கச் சென்றுவிட்டார். மறுநாள் காலை 6 மணிக்கு பேருந்தை எடுப்பதற்காக குப்பி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து காணவில்லை. இதையடுத்து டெம்போ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன பேருந்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த பேருந்தில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு உள்ளதால் அதனை கொண்டு பேருந்து இருக்கும் பகுதியை ட்ராக் செய்தனர். பிறகு மாயமான பேருந்து குப்பி பேருந்து நிலையத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜனனஹள்ளி என்ற பகுதியில் இருப்பது தெரியவந்தது. அந்த பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அனாதையாக நின்று கொண்டிருந்த பேருந்தை எடுக்க முற்பட்டனர். ஆனால் பேருந்து இயங்கவில்லை. ஏனெனில் பேருந்தில் இருந்த டீசல் முழுவதும் திருடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டீசலுக்காக பேருந்து கடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து டீசலுக்காக வாகனங்கள் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கார், இருசக்கர வாகனங்களில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் திருடப்பட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.