லெகங்கா ஆடையில் 3 கிலோ போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்கு பார்சல்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பெங்களூருவை சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அமித் கவாடே தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏற்றுமதி செய்யப்பட்ட பார்சல்களை சோதனை செய்தனர். அதில் பெண்கள் அணியும் 3 லெகங்கா ஆடையில் வெள்ளை நிற போதை பொருட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மூன்று கிலோ எடையுள்ள இந்த போதைப் பொருளின் மதிப்பு மட்டும் கோடிக்கணக்கில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட பார்சல் ஆந்திராவின் நரசபுரத்தில் இருந்து முன் பதிவு செய்யப்பட்ட ஆந்திராவுக்கு அனுப்பப்பட இருந்தது தெரியவந்தது. இந்த விவரங்களை சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு பகிரப்பட்டு அந்த நபரை பிடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் அவர் போலி முகவரி மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி பார்சலை முன்பதிவு செய்ததை கண்டுபிடித்தனர். இந்நிலையில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இந்த நபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அந்த நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.