விசாரணைக்கு சென்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள ஓலைக்குடா பகுதியில் ரூபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், அவரது உறவினர்களான புதுமைப்பித்தன், டேவிட், ஆல்ட்ரின் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் ரூபன் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரூபன் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அவரது தாயுடன் சென்றுள்ளார்.
அப்போது காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரணை செய்து கொண்டிருந்தபோது ரூபனின் தாயார் தல்வி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தல்வி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் தல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.