அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பஜார் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அரண்மனை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பவுண்டுக்கடை தெருவை சேர்ந்த பாண்டி, யானைக்கல் வீதியை சேர்ந்த அங்குராஜா, வி.கே. சாமி தெருவை சேர்ந்த சரவணன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த சுமார் 17 ஆயிரம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.