அமெரிக்க தேசிய புலனாய்வு மதிப்பீடு அறிக்கையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியால் பாதிக்கப்படும் 11 நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை பருவநிலை மாற்றத்தால் நெருக்கடிக்கு ஆளாகும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா உட்பட 11 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது அமெரிக்க தேசிய புலனாய்வு மதிப்பீடு அறிக்கையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியால் பாதிக்கப்படும் 11 நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவும் இந்தியாவும் உலக வெப்பமயமாதலின் பாதையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறப்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல் புவிசார் அரசியல் பதற்றங்களை புவிவெப்பமடைதல் அதிகரிக்கும் எனவும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு 2040-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆபத்துக்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா உட்பட 11 நாடுகள் “தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகள்” பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேசமயம் தீவிர வானிலை, வெப்பமயமாதல் வெப்பநிலை மற்றும் கடல் வடிவங்களுக்கு இடையூறு உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது ஏற்படும் தீவிரமான அல்லது லேசான சூறாவளிகள் நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவதோடு நோய் தொற்றை அதிரிக்கவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அமெரிக்க அறிக்கையில் வன்முறை மோதல்கள், மோசமான நிர்வாகம், சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றால் காலநிலை விளைவுகள் கூடுதலான அழுத்தத்தை சந்திக்க வாய்ப்புள்ளதால் எல்லைதாண்டிய இடம்பெயர்வு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அமெரிக்காவின் அறிக்கையில் வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் புதுப்பிக்கத்தக்க மின் சக்திக்கு மாற இந்தியா நடவடிக்கை எடுப்பதனை அங்கீகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.