போதைப்பொருள் கும்பல்கள் இடையிலான துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த இந்திய பெண் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெக்சிகோவில் கரீபியன் கடலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான துலும் நகரில் கடந்த புதன்கிழமை போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அப்போது அங்கு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இந்திய பெண் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணின் உடலில் துப்பாக்கி குண்டு துளைத்து அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கிச் சண்டையில் இறந்த இந்திய பெண் தொடர்பாக உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது “இமாசலபிரதேசம் மாநிலம் சோலன் நகரில் பிறந்த அஞ்சலி ரியோட் அமெரிக்காவில் வசித்து வந்தார். இவர் இமாசலபிரதேசத்தின் ஜேபி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பி டெக் படித்து முடித்தார். இதனையடுத்து அஞ்சலி ரியோட் முதுகலை பட்டப்படிப்பிற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஜான் ஜோஸ் நகருக்கு சென்றார். அங்கு 2 வருடங்களில் அஞ்சலி ரியோட் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்காவில் பிரபலம் வாய்ந்த ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலைக்கு சேர்ந்தார். இதனிடையில் அஞ்சலி ரியோட்டுக்கு சான் ஜோஸ் நகரில் உள்ள பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனத்தில் மேலாளராக வேலைபார்த்து வந்த உத்கர்ஷ் ஸ்ரீவஸ்தவா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
அதன்பின் அஞ்சலி ரியோட்-உத்கர்ஷ் ஸ்ரீவஸ்தவா தம்பதியினர் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றனர். இதில் அஞ்சலி ரியோட் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தாலும், பல புதிய இடங்களுக்கு பயணம் செய்து அதுகுறித்த சுவாரசியமான தகவல்களை இணையத்தில் பகிர்வதில் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார். இந்தநிலையில் அஞ்சலி ரியோட் தனது கணவருடன் மெக்சிகோ சென்று அக்டோபர் 22-ஆம் தேதி தனது 30-வது பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தார். இதற்காக கணவன்-மனைவி இருவரும் கடந்த 18-ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு சென்றனர். கடந்த 20-ஆம் தேதி துலும் நகரை சுற்றி பார்க்க சென்ற கணவன்-மனைவி அங்குள்ள திறந்தவெளி ஓட்டலில் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் உணவை முடித்துவிட்டு ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்காக காத்திருந்தபோது அங்கு போதைப்பொருள் கும்பலுக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அஞ்சலியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் கணவரின் கண்ணெதிரே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்கர்ஷ் ஸ்ரீவஸ்தவா அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் அஞ்சலியின் இளைய சகோதரரிடம் தெரிவித்தார். இதனைதொடர்ந்து அவர் மூலமாக இமாசலபிரதேசத்தின் சோழன் நகரில் வசித்து வரும் அஞ்சலியின் தாய்- தந்தைக்கு தகவல் கிடைத்தது. இதன் காரணமாக அஞ்சலிக்கு இறுதி சடங்குகளை செய்ய அவரது உடலை இமாசலபிரதேசம் கொண்டுவருவதற்கான முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.