டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 12′ சுற்று ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவான நிலையில் இருக்கிறது .இதில் பேட்டிங்கில் ரோகித் சர்மா,கே.எல் ராகுல் ,ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடி பார்மில் உள்ளனர். அதேபோல் பவுலிங்கில் முகமது ஷமி ,பும்ரா, ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, அஸ்வின் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர்.
அதோடு இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் டோனி இருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது. அதே சமயம் பாகிஸ்தான் அணியும் சம பலத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், பஹார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகின்றன .அதேபோல் பந்து வீச்சிலும் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். அதோடு பாகிஸ்தான் அணி பெரும்பாலும் உள்ளூர் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி இருப்பதால் ,இங்குள்ள ஆடுகளத்தின் சீதோஷ்ண நிலைக்கு பழகிவிட்டது. அந்த வகையில் இது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது .எனவே இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.