Categories
உலக செய்திகள்

‘எங்க தலைவரை விடுதலை செய்யுங்க’…. போராட்டம் நடத்திய பாகிஸ்தான் அமைப்பினர்…. கண்ணீர்ப்புகைக்குண்டு வீசிய போலீசார்….!!

போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் நடந்த மோதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் தெக்ரி-இ-லெப்பை என்ற அரசியல் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஹதீம் ஹசன் ரிஸ்வி உள்ளார். இவர்கள் பாகிஸ்தானில் இஸ்லாமிய கொள்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றி வருகிறார்கள். மேலும் இஸ்லாம் மதத்தை அவமதிப்பவர்களுக்கு  மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்  என்னும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பொதுவாகவே இவர்கள் சார்பில் நடைபெறும் அனைத்து போராட்டங்களும் இறுதியில் வன்முறையில் தான் முடிவடைகின்றன. சான்றாக கடந்த ஆண்டு பிரான்சுக்கு எதிராக இவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் தெக்ரி-இ-லெப்பை அமைப்பை பாகிஸ்தான் அரசு தடை செய்தது. மேலும் அந்த அமைப்பின் தலைவரான ஹதீம் ஹசன் ரிஸ்வியும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரை விடுதலை செய்ய வேண்டுமென தெக்ரி-இ-லெப்பை அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாக சென்றுள்ளனர். அப்பொழுது போலீசார் வைத்திருந்த சோதனைச்சாவடிகளின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. இதில் 3 போலீசார் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மோதலில் தெக்ரி-இ-லெப்பை அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதுவரை பாகிஸ்தானில் வன்முறைச் சம்பவத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 8 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |