கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 17 வயதுடைய மாணவி படித்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் வசிக்கும் முகமது என்பவருக்கும், அந்த மாணவிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். செல்போனிலேயே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். எனவே நாம் இரண்டு பேரும் நேரில் சந்தித்து பேசுவோம் என முகமது மாணவியை அழைத்துள்ளார். அதன்படி இரண்டு பேரும் தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி முகமது கட்டாயப்படுத்தி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு முகமது அந்த மாணவியிடம் பேசவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி முகமது மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமதை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.