உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 25000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அந்தக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தெற்கு உத்திரபிரதேச மேலிட பொறுப்பாளர் பிரியங்கா காந்தி அங்கேயே தங்கி சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
தேர்தல் வாக்குறுதி யாத்திரையை பராபங்கி மாவட்டத்தில் தொடங்கிய பிரியங்கா, அங்குள்ள விவசாய பண்ணையில் வேலை செய்யும் பெண்களின் உணவை உண்டு மகிழ்ந்தார். அதன் பின்னர் நடந்த தேர்தல் வாக்குறுதி யாத்திரை தொடக்க கூட்டத்தில் பேசிய ப்ரியங்கா காந்தி, “விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். ஏழை குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 25000 ரூபாய் வழங்கப்படும். கொரோனா காலத்தில் செலுத்தப்படாமல் உள்ள அனைவரது நிலுவை மின் கட்டண தொகை ரத்து செய்யப்படும்” என்று உறுதியளித்தார்.
கோதுமைக்கு 2500 ரூபாய் ஆதார விலையாக வழங்கப்படும் என்றும் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் அனைவருக்கும் மின் கட்டணத்தில் பாதி தொகை மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பிளஸ் டூ முடிக்கும் மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என்றும் பட்டதாரி பெண்களுக்கு பேட்டரியில் இயங்கும் ஸ்குகூட்டி வழங்கப்படும் என்றும் பிரியங்கா ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.