வாயில் மண்ணெண்ணையை ஊற்றி சாகசம் செய்த போது உடல் கருகி 6 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய பூர்விகா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்க்கஸில் வாயில் மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பில் ஊதும் சாகசத்தை பார்த்ததால் சிறுமிக்கும் அதுபோல செய்ய வேண்டும் என ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமி வீட்டில் வைத்து வாயில் மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பை பற்ற வைத்து அதன் மீது ஊதியுள்ளார்.
இதனால் திடீரென சிறுமி மீது தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கருகிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.