கள்ளக்குறிச்சி அருகே இரட்டிப்பாக பணம் தருவதாக 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து தலைமறைவான கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் லட்சுமி ஸ்டோர் என்ற பெயரில் வியாபாரம் செய்துவந்த ஒரு கும்பல், அந்தப் பகுதி மக்களிடம் 100 நாள்கள் பணம் கட்டினால், கொடுக்கும் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாகக் கூறி வசூல் செய்துள்ளனர்.இதில் கடந்த ஐந்து மாதத்திற்கு மேலாக சுமார் 100 கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்துவந்த, அந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் 15 நாள்களுக்கு முன்பு தலைமறைவாகினர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல் துறையிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் காவல் துணை கண்காணிப்பாளர் கோமதி தலைமையிலான காவல் துறையினர் தேடிவந்தனர்.இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாடூர் புறவழிச்சாலையில் வெங்கடேசன், சுரேஷ் கண்ணா ஆகிய இருவரையும் சின்னசேலம் காவல் துறையினரின் உதவியுடன் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.