ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சாலையிள்ள காந்திநகர் பகுதியில் ஒரு ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இந்த ஏடிஎம் மையத்திற்கு சில மர்ம நபர்கள் வந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் ஒரு கருப்பு பேப்பரால் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை மறைத்துள்ளனர். இதற்குப்பின் மினி வெல்டிங் இயந்திரம் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் 1/2 மணி நேரம் முயன்றும் ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனால் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த 11 லட்சம் ரூபாய் தப்பியது. இந்நிலையில் மறுநாள் காலையில் ஏ.டி.எம்க்கு வந்த பொதுமக்கள் இயந்திரம் உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அந்த வங்கி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த வங்கி மேலாளர் குமாரபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து மர்ம நபர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.