இலங்கை அதிபர் வேட்பாளர் தேர்தல் வருகிற 16ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் ராஜபக்சவின் சகோதரன் கோத்தபாய ராஜபக்ச களம் காண்கிறார். கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக கோத்தபாய ராஜபக்ச மக்களை சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார். அவர் தனது தேர்தல் பரப்புரையில், ‘தான் ஆட்சிக்கு வந்தால் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாற்றப்படுவார். அவருக்குப் பதிலாக வலிமையான ஒரு பிரதமர் நமக்கு கிடைப்பார்’ என்று கூறிவருகிறார்.
தனது சகோதரரும் முன்னாள் அதிபருமான ராஜபக்சவை நினைவில் வைத்து அவர் இவ்வாறு பேசிவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்ற பரப்புரையை சஜித் பிரேமதாசவும் கையில் எடுத்துள்ளார். அவர் தனது அரசுக்கு மக்கள் பெரும்பான்மை கொடுக்கும்பட்சத்தில், தான் தேர்வு செய்யும் நபரே பிரதமராக வருவார் என்று தெரிவித்துள்ளார்.
ராஜபக்சவுக்கு சிங்கள அமைப்புகள் ஆதரவு கொடுத்துவருகின்றன. கடந்த வாரம் பிரேமதாசவை சந்தித்த தமிழ் அமைப்புகள் அவருக்கு ஆதரவு கொடுத்தன. இலங்கையில் உள்ள 21 மில்லியன் மக்களில் 16 மில்லியன் மக்களுக்கு வாக்களிக்கும் உாிமை உள்ளது.