மூடீஸ் பொருளாதார தர மதிப்பீடு நிறுவனம் இந்தியாவின் மதிப்பீடு குறித்த தனது பார்வையை நிலையான இடத்திலிருந்து, எதிர்மறையான இடத்துக்கு இறக்கிக் கணித்துள்ளதற்கு இந்திய அரசுத் தரப்பில் தனது முதல் எதிர்க்கருத்தை இன்று கூறியிருக்கிறது. அதில் இந்தியா முக்கியப் பொருளாதார நிலைகளில் நல்ல வளர்ச்சியைத் தொடர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
சில நாள்களுக்கு முன்னால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவாகப் பதிவாகும் என்று சில சர்வதேச நிறுவனங்கள் கணித்திருந்தன. இத்தருணத்தில் மூடீஸ் பொருளாதார தர மதிப்பீடு நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தரக் குறியீட்டைக் குறைத்துள்ளது. அதாவது இந்தியாவின் குறியீட்டை ‘நிலையான’ (Stable) என்ற இடத்திலிருந்து ‘எதிர்மறையான’ (Negative) இடத்திற்குக் குறைத்துள்ளது.
இதற்கு தற்போது இந்தியாவில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணமாகத் தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது நிலவிவரும் பொருளாதார மந்தநிலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் இந்த நிறுவனம் கணித்துள்ளது. ஏனென்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 5 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.