தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் செலவில்லா மருத்துவ வசதியை பெற கூடிய வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இதற்கு முன்னதாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 2016 கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பிறகு மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதற்காக இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொகை 150 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலமாக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு மூலம் சிகிச்சை பெற முடியும்.
இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021 வசதியை 2025 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நான்கு ஆண்டுகள் வரை பெற முடியும். இதன் மூலமாக 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். ஏழு வகையான நோய்களுக்கு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
அரிதான நோய்கள் மற்றும் சிகிச்சைக்கு 20 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் பயன்களைப் பெறும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட 1,169 மருத்துவமனைகளின் விவரங்கள் அனைத்தும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டம் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள 1800 233 5666என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.