உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்ட உத்தரகாண்ட் முன்னாள் ஆளுநரும் பாஜகவின் தேசிய துணைத் தலைவருமான பேபி ராணி மவுரியா பெண்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, பெண்கள் மாலை 5 மணிக்கு மேல் தனியாக காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டாம் குடும்பத்திலுள்ள ஒரு உறுப்பினரை அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று கூறினர். இவருடைய இந்த பேச்சு பாஜக அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
இந்தநிலையில் பேபி ராணியின் கருத்துக்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் ஷப்பீர் அப்பாஸ், அவர் உண்மையை தான் பேசியுள்ளார். யோகி அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை அவர் அம்பலப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன என்று மார்தட்டி சொல்பவர்களுக்கு எதிராக பேபி ராணியின் கருத்து ஆளுங்கட்சியை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தன்னுடைய கருத்துக்கு விளக்கம் அளித்து பேசிய பேபி ராணி, முதல்வர் யோகி தலைமையிலான அரசும், பிரதமர் மோடி தலைமையிலான அரசும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கைக்கு தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால் எனது பேச்சை திரித்து எதிர்கட்சிகள் அரசியல் செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.