சத்தியமங்கலம் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் செங்கல் விலை உயர்ந்து 11 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொண்டப்பநாய்க்கன்பாளையம், டி.ஜி.புதூர், அத்தியப்பகவுண்டன்புதூர், இண்டியம்பாளையம் போன்ற பகுதிகளில் பெரும்பாலான செங்கல் சூளைகள் இருக்கிறது. இங்கு இருந்து செங்கல்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்வதால் செங்கல் உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த மாதம் வரை 7 ரூபாய்க்கு விற்பனையான ஒரு செங்கல் தற்போது விலை உயர்ந்து 11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியபோது “செங்கல் தயாரிக்க தேவைப்படும் செம்மண்ணை எடுத்துக்கொள்ள தமிழக அரசு இன்னும் முறையாக அனுமதி கொடுக்கவில்லை. ஆகவே செங்கல் தயாரிப்பதற்கு தேவையான செம்மண் கிடைக்காத காரணத்தினால் நாங்கள் வேலை இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே தமிழக அரசு உடனடியாக செங்கல் தயாரிப்பதற்கு தேவைப்படும் மண்ணை எடுப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.