Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை…. இது தண்ணீரில் மூழ்கி விட்டது…. கவலையில் விவசாயிகள்….!!

கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் குறிஞ்சி வயக்காடு பகுதியில் இரவு வேளையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதேபோன்று சித்தூர், பூனாச்சி, நத்தமேடு, அய்யந்தோட்டம், சீலம்பட்டி, கூச்சிக்கல்லூர், ராமாச்சிபாளையம், சுப்பராயன்கொட்டாய், செல்லிக்கவுண்டனூர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது.

இதில் சில வயல்களில் நெற்பயிரே தெரியாத அளவுக்கு மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. அதன்பின் நெற்பயிர்கள் மட்டுமின்றி 1 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளபயிர்கள், தட்டைப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்தது. அதுமட்டுமின்றி கரும்பு தோட்டத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் அது அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியபோது “ஒவ்வொரு முறையும் மழைக் காலங்களில் இதுபோன்று தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமடைகின்றது.

ஏனெனில் சாலை உயரமாக இருப்பதால் மழைநீர் வயலில் புகுந்து விடுகிறது. ஆகவே மழைநீர் வெளியேற குறிஞ்சி சமத்துவபுரம் முதல் அந்தியூர் மெயின்ரோடு வரை சாலையின் ஓரத்திலும், குறுக்கேயும் வடிகால் அமைத்து தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்போது சேதமடைந்துள்ள பயிருக்கு இழப்பீடு வழங்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |