மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள உள்காஸ்நகர் ஐந்து அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் படுக்கை அறையிலிருந்து மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து நான்காவது மாடியில் விழுந்தது. இதன் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பின் உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் ஒருவர் மட்டும் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி மண்டல பேராட்சியர் மேலாண்மை பிரிவின் தலைவர் சந்தோஷ் கூறியதாவது: “நேற்று இரவு 10 மணி அளவில் 4 மாடி படுக்கை அறையில், ஐந்தாவது மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த நரேஷ்லால் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கட்டிடம் 1995-96 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கு 15 குடியிருப்புகள், நான்கு கடைகள் உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்