Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஐராவதீஸ்வரர் கோவில்” இதை நடத்தி 17 வருடங்கள் ஆகிறது…. பக்தர்களின் கோரிக்கை….!!

ஐராவதீஸ்வரர் கோவிலினை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டது ஆகும். இந்த கோவிலில் சிவன் சன்னதி, தெய்வநாயகி அம்பாள், சரபேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், குபேரலிங்கம், துர்க்கை போன்ற சன்னதிகள் இருக்கின்றது. மேலும் 4 பிரகாரங்கள், அம்மன் சன்னதி, நந்திமண்டபம் 1008 சிற்பங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் கலைநுணுக்க வேலைபாடுகளுடன் கொண்ட சிலைகள் இருக்கின்றது.

இங்கு தினசரி வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இவ்வாறு வருபவர்கள் கோவிலில் உள்ள கலைத்திறன்களை ரசித்து பார்ப்பார்கள். இந்த கோவிலை தொல்லியல்துறையினர் பராமரித்து வருகின்றனர். கடந்த 2004-ஆம் வருடம் இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இது நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனால் பொதுவாக கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்வது ஆகம விதி ஆகும். எனினும் 17 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் குடமுழுக்கு நடத்தப்படாமல் இருக்கிறது.

ஆகவே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இறைவழிபாடு மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறியபோது “தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்று 17 ஆண்டுகள் ஆகிறது. இதனால் தற்போது கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும். இதற்கு முன்பு மத்திய அரசின் அனுமதியுடன் இந்த கோவிலுக்கு என ஆகம முறைப்படி செய்யப்பட்ட சிலைகள் பாதுகாப்பிற்காக தஞ்சை சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தில் உள்ளது.

மேலும் மத்திய அரசால் பாதுகாப்பிற்காக எடுத்துச் சென்ற ஆகம கற்சிலைகள் எல்லாம் மிகவும் சேதம் அடைந்துள்ளது. அந்த சிலைகள் எல்லாம் வழிபாட்டிற்கு சரியானது இல்லை. இதனால் அந்த சிலைகளை புதுப்பித்து திரும்பவும் இந்த கோவிலுக்கு கொண்டு வரவேண்டும். இந்த கோவிலின் முன் நகர்த்தன விநாயகர் சிலை சேதம் அடைந்ததால் அது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே ஆகம முறையின்படி விநாயகர் சிலை புதுப்பித்து வைக்க வேண்டும். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |